ஈழப்போராட்டப் பாடல்கள்.
ஈழப்போராட்ட எழுச்சிப் பாடல்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கற்றுக்குட்டி விளையாட்டு, பரீட்சார்த்த முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாதபடி மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நூற்றுக்கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. "இந்த மண் எங்களின் சொந்தமண்" "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்" "பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி" போன்ற பாடல்களில்லாமல் என்போன்றவர்களின் விடலைப்பருவம் முழுமைபெறாது. ஒரு பெரிய இராணுவத்தளம் கைப்பற்றிய மகிழ்ச்சி, அதற்குரிய பாட்டு வெளிவரும்போதுதான் முழுமைபெறும். புலிகளின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள். ********************************** ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில ஒலிக்க விடப்பட்டன. 'எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?' என்ற பாடல், 'தோல்வி நிலையென நினைத்தால்' என்ற பாடல் போன்றன ஒலிக்க விடப்பட்டன. அதே நேரத்தில் ஒவ்வொரு இயக்கமும் தங்களுக்கென பாடல்களை இயற்றி இசையமைத்து வெளிவிடத் தொடங்கின. எனக்கு நினைவு தொடங்கின காலத்திலேயே புலிகள் களத்தில் முனைப்புப் பெற்றுவிட்டார்கள். ஆக, எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் கிடைத்த எழுச்சிப் பாடல்கள் புலிகளினது மட்டுமே. (தொடக்க காலத்தில் மற்றய இயக்கங்களால் வெளியிடப்பட்ட பாடல்களின் ஒலிவடிவங்கள் யாரிடமாவது இருந்தால் அவற்றைப் பெற ஆவலாயிருக்கிறேன்.) புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது இசைநாடா "புலிகள் பாடல்கள்". அவர்களின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத்தட்டுக்கள் வெளிவந்தன. டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா என்று முதன்மை இசைக்கலைஞர்களின் குரலில் பாடல்கள் வந்தன. எல். வைத்தியநாதன் நிறையப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு தமிழகத்துக் கவிஞர் இன்குலாப் போன்றவர்களும் அப்பாடல்களை எழுதியிருந்தார்கள். இந்திய - புலிகள் யுத்த நேரத்திலும் தமிழகத்திலிருந்து பாடல்கள் வந்தன. பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள். அன்றைய நேரத்தில் மட்டக்களப்பில் போராளிகளைக் கொண்டு தொடக்கப்பட்ட இசைக்குழு இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதுடன், ஏராளமான பாடல்களை உருவாக்கியுள்ளது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும் வந்தன. மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்கள் வந்தன. இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் மெட்டுக்களில் வந்த பாடல்களின் இனிமை என்னைக் கவர்ந்தது. இந்த நேரத்தில்தான் 'சிட்டு' என்ற அருமையான பாடகன் இனங்காணப்பட்டான். அந்தக் குரலுக்குரிய வசீகரமும் நயமும் வேறிடத்தில் நான் கண்டதில்லை. ஏறத்தாழ 75 பாடல்கள் வரை பாடிய அந்தப் போராளி இறுதியில் சமர்க்களமொன்றில் மடிந்துபோனது ஈழத்து எழுச்சிப்பாடல்களுக்கு 'ஈடு செய்யமுடியாத இழப்பு'. இப்பாடல்களில் அனைத்துவகைகளுமுள்ளன. கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள், வீரச்சாவடைந்த தோழர்களை நினைவுகூரும் பாடல்கள், படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள், இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள், போருக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள் என்று அனைத்துக்கூறுகளுமுண்டு. பொப்பிசைப் பாடல்கள்கூட புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களிற் பெரும்பான்மையானோர் சும்மா தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்த நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன. அண்மையிற்கூட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், ஹரிகரன், சித்ரா என்று முன்னணி திரையிசைக் கலைஞர்கள் பாடிய ஈழவிடுதலைப்போராட்ட ஆதரவுப் பாடல்கள் வெளிவந்தன. ஆனால் எங்கள் கலைஞர்கள் பங்குபற்றிய எந்தப்பாடல்களுக்குமிருக்கும் வலு அப்பாடல்களுக்கில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான் பொருளாதார, நேர, ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் புலிகளின் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன. ஆனாலும் தமிழ்திரையிசையைப் படியெடுத்துச் சிலர் செய்த கூத்துக்களால் வேண்டத்தகாத சில பாடல்களும் வந்து சேர்ந்தன. தனித்தன்மை ஓரளவு குலையத் தொடங்கியது தொன்னூறுகளின் இறுதியில்தான். ஆனாலும் மக்கள் மத்தியில் அவற்றுக்கு வரவேற்பு இருந்ததென்னவோ உண்மைதான். கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள் (வெளியுலகப் பார்வையில் தற்கொலைப் படையாட்கள்). இவர்களைப் பற்றியும் அவ்வப்போது எனக்குத் தெரிந்த குறிப்புக்களைத் தர முயல்கிறேன். அதிகம் அலட்டி விட்டேன். அடுத்த பதிவில் பாடலொன்றுடன் சந்திக்கிறேன். நன்றி. ************************** மேஜர் சிட்டு அவர்கள். படங்கள் பெறப்பட்டது இங்கிருந்து தமிழ்ப்பதிவுகள் Labels: அறிமுகம், தொகுப்பு, பதிவர் வட்டம் |
Comments on "ஈழப்போராட்டப் பாடல்கள்."
இயக்கத்தின் வளர்ச்சியின் மற்றெரு குறியீடாக நான் நேரில் கண்டது அவர்களுடைய வெகுசன தொடர்பு ஊடகங்கள். செய்திதாள்களையோ, துண்டு பிரசுரங்களையோ அச்சடித்து மக்களிடையே விநியோகம் செய்யமுடியாமல் பொருளாதார தடையும், பொருட்கள் தடையும் இருந்த காலகட்டத்தில் பள்ளிக்கூட மாணவர்களின் நோட்டு புத்தக தாளையும், பொருட்களை மடித்து கொடுக்கும் தாள்களிலும் அச்சடித்து தமது கருத்துகளை பரப்பியிருந்ததைப் பார்த்தேன்.
தமிழ் கவிஞர்களையும், இசை கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி நூற்றுக்கணக்கான ஒலிப்பேழைகளை இக்குறைந்த கால கட்டத்தில் உருவாக்கியுள்ளனர். தமிழீழத்தில் வாழும் மக்களனைவரும் குறிப்பாக சிறார்கள் கூட பல இயக்கப் பாடல்களைப் பாடுகின்றனர் என்றால் இந்த ஒலிப்பேழைகளின் வெற்றி எனலாம். உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், தேனிசை செல்லப்பா மற்றும் புதுவை இரத்தினதுரை போன்றோரின் பங்கு தமிழீழ விடுதலைப் பணியில் பெரும் மதிப்புக்குறியதே.
விடுதலைப்புலிகள் ‘புலிகளின் குரல்’ என்ற வானொலி சேவையை பல்லாண்டுகளாக திறம்பட, மக்கள் கேட்கும் வண்ணம் நடத்தி வருகின்றார்கள். வானொலி நேயர் மன்றங்களையும் உருவாக்கி மக்களின் ஒன்றிப்புக்கும், பொதுமக்களின் திறமையை வெளிக்கொணருவதற்கும் மற்றும் ஈடுபாட்டினை வளர்க்கவும் முயற்சி செய்கிறார்கள். மக்களிடையே பொது அறிவை வளர்க்கும் நோக்கத்துடனும், தமிழீழத்தைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவும் பல பொது அறிவு விடயங்களை, தரவுகளை ஒலிபரப்புகிறார்கள். ஆங்கில அறிவை வளர்க்க, இயக்க சிந்தனைகளோடு கூடிய நல்ல நிகழ்ச்சிகளை புதுமையாக தயாரித்து வழங்கியதை நானே பலமுறை கேட்டு ரசித்துள்ளேன்.
‘நிதர்சனம்’ என்ற அமைப்பை உருவாக்கி செய்திபடங்கள், குறும் விவரண மற்றும் முழுநீழ திரைப்படங்களையும் உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலேயே புலிகளின் செய்தி திரைப்படங்களை ‘ஒளிவீச்சு’ என்ற பெயரில் பார்த்துள்ளேன். போரில் பெற்ற வெற்றிகளை, கடுமையான போர்க்களங்களை செய்திகளாக்கி, நேரில் படம் பிடித்து காண்பித்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் குறும் படங்கள், செய்தி படங்கள் உலக ஊடக அரங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஊடக நிபுணர்கள் வியக்கும் வண்ணம் தரமான போர்த் திரைப்படங்களை தயாரிக்கின்றனர். கடலோரக் காற்று, உப்பில் உறைந்த உதிரங்கள் என்ற திரைப்படங்களைப் பார்த்துள்ளேன். தரம், புதுமை, ஆழமான கருத்து செறிவுள்ள தயாரிப்புகளை கொண்டுவர பணம் மட்டுமல்ல அர்ப்பணிப்பும், தியாகமும், கடின உழைப்பும் முக்கியமானவைகள். அதுவே விடுதலைப் புலிகளின் வளர்ச்சி.
விடுதலைப்புலிகளின் மேற்கத்திய இசைபாண்டு வாத்திய குழுவினரையும் நேரில் கண்டு வியந்து போனேன். நேர்த்தியான ஆடைகள், புதிய இசைக்கருவிகள், ஒய்யாரமான நடையில், காதுக்கு இனிமையான இசையை இசைத்தவர்கள் அனைவருமே பெண் போராளிகள். இந்தியாவில் குடியரசு நாளில் தலைநகர் புது தில்லியில் இராணுவ அணிவகுப்பு போன்றதாகவே விடுதலைப் புலிகளும் செயல்படுவதை பார்த்த போது, இவர்களையா உலகம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், கொரில்லாக்கள் என்று முத்திரை குத்துகின்றனர் என்று நொந்து போனேன். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத பொல்லாத உலகம் இது.
மேற்கூறப்பட்ட இவ்வனைத்து விடயங்களும் வெறும் பொருள் பலத்தாலும், ஆட்பலத்தாலும் சாதிக்கக் கூடியவையல்ல. ஏனெனில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை விட பல நூற்றாண்டுகள் செயல்படும் சில நிறுவனங்கள் போதுமான பொருளையும், ஆட்களையும் கொண்டிருந்த போதும் சாதிக்காத சாதனைகளை இவர்கள் சாதிக்கின்றார்கள் அல்லது வேகமாக வளர்ந்துள்ளார்கள் என்றால் அது கடின உழைப்பாலும், அர்ப்பணத்தாலும் மட்டுமே. கூலிக்காகவும், சுயநல தேவைகளுக்காகவும் உழைப்பவர்களைக் கொண்டு எந்த நிறுவனமும், இயக்கமும் வளராது என்பது இங்கு நான் கற்ற பாடம்.
ethanai paadai eppadi padi enna?thamil enam uoomai kooddan mathiti pulijin thuvakukalin munnal adimaijaki nasipaddu alinthu poonathakave vatalaru eluthappadum. muthalil pulikalai theervukku vatach solli netukuthal kodunkoo.adkalai pejataka vendam enru porkodi thookkunkoo.
neenkal kurippidum.kavinarkalum pulikalum sejthathu verum unarchi uooddum enavathathai thaan.thamil enavathathai paavithu ella vasathi vajpukalaiyum uchijilulla pulikal adainthu viddarkal. eppadi sinkala thalaimaikal enap pitachanaijai vaithu thankalai valamakinaarkalo athaithan pulijum sejkirathu.puli eni thannidam kuvinthulla panathai kappata pootadume olija thamilarkalukaka pootadathu.eththanai kaai kalachata eluchi enru neekal petumaipaduvathu ethatkenru naalantham elankaijil nadakkum kolaikalai vaithu joosijunkal.
kalaikalum elakkijankalum manitharkalai ujarthuvathtkaka utuvakum poothuthaan athu nalla palanai thatukinrathu. unkal manachadchijai kelunkal.pulijin esaijalum kavithaikalalum thamilatukku kidaithathu enna?entha nimidam vatai otu sirija nambikaijai kooda makkaluku pulijal uruthi koora mudijavillai.entha mannil vaala mudiyum enru.juththam jutham enru sakaththan paathai kaada mudikinrathu.savathatka thamilan piranthan?
அடைக்கலராசா,
முதல் வருகைக்கு நன்றி.
நீங்கள் சிறிலின் பதிவில் ஈழத்தில் சாதியம் பற்றிய குறிப்பை எழுதிய அடைக்கலராசா தானே? இப்போதும் ஈழத்திலிருந்து தான் பதிகிறீர்களா?
ஆம். மாட்டுத்தாள் பேப்பர் என்று நாங்கள் கூறும் ஒருவகைத் தாளில்கூட சிலநாட்கள் பத்திரிகை வந்தது.
விரிவான உங்கள் பின்னூட்டுக்கு நன்றி.
உங்கள் பதிவு பார்த்தேன்.
நன்றாக இருந்தது.
சிட்டுவைப் பற்றி மேலதிகமாக எழுதுங்களேன்.
புகழ்
லண்டன்
வணக்கம்.
நான்தான் அதே அடைக்கல ராசா. தமிழீழத்தில் சரியாக ஓராண்டு வாழும் வாய்ப்புக் கிட்டியது. அதன் அனுபவங்களை வன்னிக்காட்டு வசம் என்ற புத்தகமாக எழுதினேன் ஆனால் வெளியிட முடியவில்லை. ஆகவே எனது புதிய வலைத்தளத்தில் பதிக்க துவங்கியுள்ளேன். வாசித்து பிறர் வாசிக்கவும் தெரியப்படுத்துங்கள். நன்றி http://thadangal.blogspot.com/
வணக்கம் வன்னியன்
நல்ல முயற்சி, தொடருங்கள், வாழ்த்துக்கள்.
வன்னியன்
நல்ல முயற்சி, தொடருங்கள், வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.. தொடர்ந்து எழுதுங்கள்.
லண்டன் - புகழ்,
கானா பிரபா, சந்திரவதானா,
உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.
அடைக்கலராசா (உங்களைப் பெயர் சொல்லியே அழைக்கிறேன். ஏதும் சிக்கலில்லைத்தானே?)
உங்கள் முயற்சிக்கு நன்றி.
உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன்.
நன்று.
நிச்சயம் தொடரைப் படிக்கிறேன்.
வேறு ஆட்கள் உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்தி விட்டார்கள்.