ஈழப்போராட்டப் பாடல்கள்.
ஈழப்போராட்ட எழுச்சிப் பாடல்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கற்றுக்குட்டி விளையாட்டு, பரீட்சார்த்த முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாதபடி மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நூற்றுக்கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. "இந்த மண் எங்களின் சொந்தமண்" "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்" "பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி" போன்ற பாடல்களில்லாமல் என்போன்றவர்களின் விடலைப்பருவம் முழுமைபெறாது. ஒரு பெரிய இராணுவத்தளம் கைப்பற்றிய மகிழ்ச்சி, அதற்குரிய பாட்டு வெளிவரும்போதுதான் முழுமைபெறும். புலிகளின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள். ********************************** ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில ஒலிக்க விடப்பட்டன. 'எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?' என்ற பாடல், 'தோல்வி நிலையென நினைத்தால்' என்ற பாடல் போன்றன ஒலிக்க விடப்பட்டன. அதே நேரத்தில் ஒவ்வொரு இயக்கமும் தங்களுக்கென பாடல்களை இயற்றி இசையமைத்து வெளிவிடத் தொடங்கின. எனக்கு நினைவு தொடங்கின காலத்திலேயே புலிகள் களத்தில் முனைப்புப் பெற்றுவிட்டார்கள். ஆக, எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் கிடைத்த எழுச்சிப் பாடல்கள் புலிகளினது மட்டுமே. (தொடக்க காலத்தில் மற்றய இயக்கங்களால் வெளியிடப்பட்ட பாடல்களின் ஒலிவடிவங்கள் யாரிடமாவது இருந்தால் அவற்றைப் பெற ஆவலாயிருக்கிறேன்.) புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது இசைநாடா "புலிகள் பாடல்கள்". அவர்களின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத்தட்டுக்கள் வெளிவந்தன. டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா என்று முதன்மை இசைக்கலைஞர்களின் குரலில் பாடல்கள் வந்தன. எல். வைத்தியநாதன் நிறையப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு தமிழகத்துக் கவிஞர் இன்குலாப் போன்றவர்களும் அப்பாடல்களை எழுதியிருந்தார்கள். இந்திய - புலிகள் யுத்த நேரத்திலும் தமிழகத்திலிருந்து பாடல்கள் வந்தன. பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள். அன்றைய நேரத்தில் மட்டக்களப்பில் போராளிகளைக் கொண்டு தொடக்கப்பட்ட இசைக்குழு இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதுடன், ஏராளமான பாடல்களை உருவாக்கியுள்ளது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும் வந்தன. மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்கள் வந்தன. இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் மெட்டுக்களில் வந்த பாடல்களின் இனிமை என்னைக் கவர்ந்தது. இந்த நேரத்தில்தான் 'சிட்டு' என்ற அருமையான பாடகன் இனங்காணப்பட்டான். அந்தக் குரலுக்குரிய வசீகரமும் நயமும் வேறிடத்தில் நான் கண்டதில்லை. ஏறத்தாழ 75 பாடல்கள் வரை பாடிய அந்தப் போராளி இறுதியில் சமர்க்களமொன்றில் மடிந்துபோனது ஈழத்து எழுச்சிப்பாடல்களுக்கு 'ஈடு செய்யமுடியாத இழப்பு'. இப்பாடல்களில் அனைத்துவகைகளுமுள்ளன. கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள், வீரச்சாவடைந்த தோழர்களை நினைவுகூரும் பாடல்கள், படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள், இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள், போருக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள் என்று அனைத்துக்கூறுகளுமுண்டு. பொப்பிசைப் பாடல்கள்கூட புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களிற் பெரும்பான்மையானோர் சும்மா தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்த நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன. அண்மையிற்கூட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், ஹரிகரன், சித்ரா என்று முன்னணி திரையிசைக் கலைஞர்கள் பாடிய ஈழவிடுதலைப்போராட்ட ஆதரவுப் பாடல்கள் வெளிவந்தன. ஆனால் எங்கள் கலைஞர்கள் பங்குபற்றிய எந்தப்பாடல்களுக்குமிருக்கும் வலு அப்பாடல்களுக்கில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான் பொருளாதார, நேர, ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் புலிகளின் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன. ஆனாலும் தமிழ்திரையிசையைப் படியெடுத்துச் சிலர் செய்த கூத்துக்களால் வேண்டத்தகாத சில பாடல்களும் வந்து சேர்ந்தன. தனித்தன்மை ஓரளவு குலையத் தொடங்கியது தொன்னூறுகளின் இறுதியில்தான். ஆனாலும் மக்கள் மத்தியில் அவற்றுக்கு வரவேற்பு இருந்ததென்னவோ உண்மைதான். கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள் (வெளியுலகப் பார்வையில் தற்கொலைப் படையாட்கள்). இவர்களைப் பற்றியும் அவ்வப்போது எனக்குத் தெரிந்த குறிப்புக்களைத் தர முயல்கிறேன். அதிகம் அலட்டி விட்டேன். அடுத்த பதிவில் பாடலொன்றுடன் சந்திக்கிறேன். நன்றி. ************************** மேஜர் சிட்டு அவர்கள். ![]() ![]() படங்கள் பெறப்பட்டது இங்கிருந்து தமிழ்ப்பதிவுகள் Labels: அறிமுகம், தொகுப்பு, பதிவர் வட்டம் |