Sunday, November 26, 2006

சூரியதேவனின் வேருகளே - மாவீரர்நாட் பாடல்

இன்று தமிழீழ மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூரும் நாள்.
அவர்கள் நினைவாக ஒருபாடல் 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் இடம்பெறுகிறது.

இப்பாடல், ஒவ்வொரு வித்துடல் விதைப்பின்போதும் ஒலிக்கவிடப்படும்.
வித்துடலோ, நினைவுப்படமோ வீட்டிலிருந்து துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒலிக்கவிடப்படும்.
பின் இறுதி மலர்வணக்கம் நடைபெறும்போதும் விதைகுழியில் விதைக்கப்படும்போதும் இப்பாடல்தான் ஒலிக்கவிடப்படும்.

இப்பாடலை அச்சந்தர்ப்பங்களில் கேட்காதவர்களுக்கு இப்போது எவ்வகை உணர்வு வருமென்று தெரியவில்லை. ஆனால் வித்துடல் விதைப்பு நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்த அனுபவமுள்ளவர்களுக்கு இப்போது கேட்டாலும் இப்பாடல் மிகுந்த உணர்வுப்பெருக்கைத் தரக்கூடியது.
சாதாரண நேரங்களில் பத்தோடு பதினொன்றாக இப்பாடலைக் கேட்கும் துணிவு எனக்கில்லை. பாடலின் இசை கேட்டாலே பங்குகொண்ட சில நூறு வித்துடல் விதைப்புக்களும் விதைக்கப்பட்டவர்களும்தாம் ஞாபகம் வருகிறார்கள்.

இசை: முரளி
பாடியவர்கள்: சாந்தன், சுகுமார் உட்பட பலர்.






சூரியதேவனின் வேருகளே
ஆயிரம் பூக்களை சூடுகிறோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்

மடியில் மலர்ந்த மகளே -எங்கள்
குடியில் மலர்ந்த மகனே
விடியும் பொழுதின் கதிரே -புலி
கொடியில் உலவும் உயிரே

கண்களில் நீர்வழிந்து ஓடிடஓடிய
கைகளினால் மலர் சூடுகின்றோம்
காலெடுத்தாடிய தாயகப்பூமியை
காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்

மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே
மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே
மாதவம் செய்த எம் பிள்ளைகளே -நாங்கள்
மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே

செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே
சின்னச் சிரிப்பு ஒன்றை சிந்துங்களே
தேச விடுதலையை தோளில் சுமந்த எங்கள்
செல்வங்களே ஏதும் சொல்லுங்களே

வந்துநின்றாடிய சிங்களச் சேனையை
வாசல்வரை சென்று வென்றவரே
வாழும்வரையும் உங்கள் பாதையிலே செல்லும்
வல்லமை தாருங்கள் கன்றுகளே

_____________________________________________

No comments:

Post a Comment