1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம். பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர். அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.
திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது. அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, கப்டன் சாந்தா.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது. மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.
19.04.1995 அன்று திருமலைத் துறைமுகத்துள் விடுதலைப்புலிகளால் பாரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல்தான் மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கி வைத்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஈழத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சூரயா, வீரயா போன்ற போர்க்கலங்களின் பெயர்களைத் தெரியாமலிருக்க முடியாது. அடிக்கடி இக்கலங்களின் தாக்குதலுக்கு முகங்ககொடுக்க வேண்டியிருந்தது. இக்கலங்கள் தமிழர்களிடத்தில் மிகக் கடுமையான இழப்புக்களை மட்டுமன்றி பெரும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன. இவற்றில் சூரயா கடற்கலம் திருமலைத்துறைமுகம் மீதான புலிகளின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்துடன் ரணசுறு கடற்கலமும் இன்னொரு கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டன. இக் கரும்புலித்தாக்குதலை நடத்தி நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். மதுசா, சாந்தா, தணிகைமாறன், கதிரவன் ஆகிய கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தி வீரச்சாவடைந்தனர்.
இவ்வெற்றியைக் கொண்டாடும் பாடல்தான் இவ்விடுகையில் வரும் பாடல். பாடியவர் திருமலைச்சந்திரன். பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: இசைபாடும் திரிகோணம்.
திருமலை மீது இன்னொரு பாடல். இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்ற பாடலிது. திருமலை மீட்பைப் பற்றிய பாடல். இப்போது கேட்க இனிக்கிறது. நீங்களும் கேளுங்கள்.
பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன். மற்றவர் யாரென்று தெரியவில்லை. பாடலுக்கு முன்பு இசைத்தட்டின் அறிமுகமும் வருகிறது. பொறுமையற்றவர்கள் சற்று இழுத்துவிட்டு பாட்டைக் கேட்கவும்
கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
ஈழப்பாடல்களில் முதலாவதாக வரும் பாடலிது.
முதலாவதாக எதைத்தரலாமென்று யோசித்ததில், தலைநகரிலிருந்தே தொடங்குவோமென்று பட்டது.
**என் அலட்டல்கள் தேவையில்லாதவர்கள் நேரடியாக கீழே சென்று பாடலின் ஒலிவடிவத்தைக் கேட்டுச் செல்லவும்;-). பாடல்வரிகளையும் கீழே தந்திருக்கிறேன்.
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.
பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.
யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.
'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.
புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது. அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.
"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?" "ஆள் இப்ப தலைநகரில" என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.
திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.
****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா? அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா? திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா? புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன? போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். *****
இதோ, தலைநகர் மீதொரு பாடல். பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன். கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள். (சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)
கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு.
கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா? கொடி படைசூழ நாட்டை இழப்போமா? மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா? கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும். பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும். மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும். மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும். கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
வீரம் விளையாடும் நேரம் எழுவாயா? வேங்கைப் படையோடு நீயும் வருவாயா? தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா? தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா? கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.