இப்பாடல் குட்டிக்கண்ணனால் பாடப்பட்டு பிரபலமான பாடல். வீதி நாடகங்கள் உட்பட பல இசைநிகழ்ச்சிகள் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். ஏராளமானோரைக் கவர்ந்தது இப்பாடல். எளிமையான இசை, அழகான வரிகள்.
பாடியவர் - குட்டிக் கண்ணன் இசை - தமிழீழ இசைக்குழு வரிகள் - முல்லைச்செல்வன்
ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுத்தி வந்த வீதி எங்கள் அக்கா அண்ணையரே எதிரி இங்கு வரலாமா எங்கள் மண்ணை ஆள நினைச்சா வேங்கை நாங்க விடலாமா (ஆண்டாண்டு)
வீட்டுக்கொரு வீரன் போனா விடுதலையும் நாளை வரும் வீதியிலே சுத்தித் திரிஞ்சா அடிமையாகச் சாக வரும் ஆட்டம் போடும் ராணுவங்கள் அலறி ஓடணும் . நாம் அடிமை இல்லை என்று புதிய பரணி பாடணும் (ஆண்டாண்டு)
எங்கள் வேங்கைத் தலைவன் தானே எங்களுக்கு வழிகாட்டி எதிரிகளின் பாசறை யாவும் எரித்திடுவோம் தீ மூட்டி பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு (ஆண்டாண்டு)
என்னினமே என் சனமே இன்னும் என்ன மயக்கமா எதிரிகளின் பாசறை யாவும் எரித்திடவே தயக்கமா பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா (ஆண்டாண்டு)
திருமலை மீது இன்னொரு பாடல். இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்ற பாடலிது. திருமலை மீட்பைப் பற்றிய பாடல். இப்போது கேட்க இனிக்கிறது. நீங்களும் கேளுங்கள்.
பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன். மற்றவர் யாரென்று தெரியவில்லை. பாடலுக்கு முன்பு இசைத்தட்டின் அறிமுகமும் வருகிறது. பொறுமையற்றவர்கள் சற்று இழுத்துவிட்டு பாட்டைக் கேட்கவும்
கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
ஈழப்பாடல்களில் முதலாவதாக வரும் பாடலிது.
முதலாவதாக எதைத்தரலாமென்று யோசித்ததில், தலைநகரிலிருந்தே தொடங்குவோமென்று பட்டது.
**என் அலட்டல்கள் தேவையில்லாதவர்கள் நேரடியாக கீழே சென்று பாடலின் ஒலிவடிவத்தைக் கேட்டுச் செல்லவும்;-). பாடல்வரிகளையும் கீழே தந்திருக்கிறேன்.
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.
பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.
யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.
'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.
புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது. அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.
"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?" "ஆள் இப்ப தலைநகரில" என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.
திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.
****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா? அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா? திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா? புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன? போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். *****
இதோ, தலைநகர் மீதொரு பாடல். பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன். கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள். (சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)
கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு.
கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா? கொடி படைசூழ நாட்டை இழப்போமா? மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா? கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும். பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும். மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும். மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும். கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.
வீரம் விளையாடும் நேரம் எழுவாயா? வேங்கைப் படையோடு நீயும் வருவாயா? தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா? தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா? கோண மலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்.