வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலிது. பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது. 'சோகப் பாடல்களுக்கென்றால் சிட்டு தான்' என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேருன்ற இப்படியான பாடல்கள் காரணமாக அமைந்துவிட்டன. மேற்படி செயலிகள் தொழிற்படாவிட்டால் நேரடியாக கீழுள்ள இணைப்பை அழுத்திக் கேளுங்கள். வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர் _________________________________________ மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம் பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம் புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர் பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர் வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர் விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர் பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர் பூநகரி நாயகராய் நீர்விளங்குகின்றீர் வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர் விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள் வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது நாகதேவன்துறையினிலே காற்றாகினீர் -அந்த ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர் வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர் நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில் நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம் பஞ்சு நெருப்பாகிவரும் பகையை முடிப்போம் -பிர பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம். Labels: களவெற்றி, நினைவுப்பாடல், மாவீரர் |
Comments on "வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்"
என் மனதை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலைக் கேட்காமல் வரிகளை வாசிக்கவே உடல் முழுவதும்
ஏதோ பரவுவது போன்ற உணர்வு.
பாடலைக் கேட்கும் போதெல்லாம், கண்கள் சொரிவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை.
என் உணர்வுகளின் அசைவுக்கு>
சிட்டுவின் அந்தக் குரலும் ஒரு காரணம்.
என் தம்பியின் வீரமரணம் பலமான காரணம் என்று எண்ணுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரவதனா.
உங்கள் தம்பியும் (மயூரன் தானே?) இச்சமரில்தான் வீரச்சாவென்பது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்தான் ஞாபகம் வந்தது.
ஓம்,
மயூரன்தான்