இன்னும் ஐந்து மணித்துளியில்...
கடற்கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்ட பாடலிது. இது வழமையான பாடல்களிலிருந்து சற்று வித்தியாசமான களத்தைக் கொண்டிருக்கிறது. பாடல் எதைப்பற்றி இருக்கிறதென்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு கேட்டால்தான் பாடலை முழுமையாக உணர முடியும். விடுதலைப் புலிகளின் கரும்புலித்தாக்குதல்கள் பல்வேறு வகைப்பட்டவை. வெடிமருந்து நிரம்பிய வாகனத்துடன் சென்று இலக்கை அடைந்ததும் வெடித்தல், வெமருந்துப்படகை கடற்கலங்களில் மோதி வெடிக்கவைத்து கடற்கலத்தை மூழ்கடித்தல், சிறப்பு அதிரடியணியாக இலக்கை அடைந்து எதிரியுடன் சண்டையிட்டு நோக்கத்தை நிறைவேற்றல், வெடிகுண்டை உடலிற் பொருத்தி தருணம் பார்த்திருந்து வெடிக்க வைத்து மனித இலக்குகளை அழித்தல் என்ற முறைகளில் அத்தாக்குதல்கள் அமையும். கடலில் நடத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களின் இன்னொரு வகையுமுண்டு. நீரடியால் நீந்திச்சென்று குண்டை கடற்கலத்தில் பொருத்தி வெடிக்கவைத்து அக்கலத்தை மூழ்கடிக்கும் முறையே அது. தொடக்கத்தில், குண்டைப் பொருத்திவிட்டுத் திரும்பி வராமல், சேர்ந்தே வெடிக்கும் முறையில் சில தாக்குதல்களைப் புலிகள் நடத்தினார்கள். மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கிவைத்த திருகோணமலைத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கடற்கரும்புலிகள் அவ்வாறு தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்திருந்தனர். குண்டைப் பொருத்தி நேரக்கணிப்பியை (Timer) இயக்கிவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்பிவரும் முறையிலும் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். [திட்டமிடப்பட்டதை மீறி தாக்குதல் நடத்துபவரின் முடிபுக்கேற்பவும் நிலைமை மாறுவதுண்டு. விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலான நெல்லியடித் தாக்குதலில், தாக்குதலாளி வாகனத்தை விட்டுவிட்டுப் பாதுகாப்பாக திரும்பிவருவதே திட்டமாக இருந்தும் கப்டன் மில்லர் வாகனத்துடன் சேர்ந்து வெடித்திருந்தார்.] இந்தப்பாடல், நீரடியால் நீந்திச்சென்று எதிரியின் கடற்கலத்தில் குண்டுபொருத்தும் கரும்புலி வீரர் பாடுவதாக எழுதப்பட்டுள்ளது. நேரக்கணிப்பியை இயக்கிவிட்டுத் திரும்பிவராமல் குண்டுடன் சேர்ந்து தானும் வெடிக்கும் கரும்புலிவீரரே இப்பாடலுக்குரியவர். உண்மையில் தாக்குதல் நடத்தப்படும் முறையை விட்டுவிடுவோம். இப்போது அக்கரும்புலிவீரர் எதிரியின் கடற்கலத்தின் அடிப்பாகத்தில் குண்டை அழுத்திப் பிடித்தபடி, நேரக்கணிப்பியை இயக்கிவிட்டுக் காத்திருக்கிறார். சிலநிமிடங்களில் குண்டுவெடிக்கப் போகிறது. இன்னும் ஐந்து மணித்துளிதான் இருக்கிறது. இந்தநிலையில் அக்கரும்புலி வீரர் ஒவ்வொரு மணித்துளியாகக் குறைத்துக் கொண்டு பாடுகிறார். இனி பாடலைக் கேளுங்கள். பாடல் தரும் உணர்ச்சிக்குக் காரணம் பாடல்வரிகளா, இசையா, குரலா என்பதைச் சொல்ல முடியாது. தேனிசை செல்லப்பாவின் குரல் எவ்வளவு அருமையாகப் பொருந்துகிறது! இசை மிக அருமையாக இருக்கிறது. பாடல்வரிகள் பற்றி எனக்குக் கருத்தில்லை. காசியானந்தன் அவர்கள் எழுதிய பாடல்களின் வெற்றிக்கு அவரின் வரிகளையும்விட தேனிசை செல்லப்பாவின் குரல்தான் பெரியளவு காரணமாக இருக்கிறதென்பதே என் கருத்து. இப்பாடலை எழுதியவர் காசியானந்தன்.
|
Comments on "இன்னும் ஐந்து மணித்துளியில்..."
பாடலுக்கு நன்றி
வன்னி,
பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.
சந்திரவதனா, வெற்றி,
வருகைக்கு நன்றி.
super songs Thanks