காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலிகள்" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர். இதென்ன மறைமுகக் கரும்புலி? வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள். இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு. இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளில் இவர்கள் பற்றிய பாடலொன்றைப் பதிவாக்குவது பொருத்தமானதும்கூட. கல்லறைகள் காணாது (பாடல் வரிகளை முற்றுமுழுதாகச் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.) காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம் வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம் வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள் சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள் வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று இவர்கள் தொடர்புடைய இன்னொரு பாடலுக்கான இணைப்பு: வேர்கள் வெளியில் தெரிவதில்லை Labels: கரும்புலி, திருமலைச் சந்திரன், நினைவுப்பாடல், புதுவை இரத்தினதுரை, மாவீரர் |
Comments on "காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று"