வேர்கள் வெளியினில் தெரிவதில்லை
ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலிகள்" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர். இதென்ன மறைமுகக் கரும்புலி? வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள். இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு இன்று பொருத்தம் கருதி இப்பாடலை இடுகிறேன். பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை. பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்.
|